யாழ். பல்கலையில் முன்னாள் நூலகர் நினைவுப் பேருரையும், அரும் பொருள்கள் கையளிப்பும்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் அமரர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தத்தின் இராண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும், நினைவுப் பேருரையும் நேற்று (30) வியாழக்கிழமை பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நினைவுகூரப்பட்டது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஸ்ட உதவி நூலகர் கலாநிதி மைதிலி விசாகரூபன் ஆகியோர் அஞ்சலியுரை ஆற்றினர். சிரேஸ்ட உதவி நூலகர் சி. கேதீஸ்வரன் “இணையவழி கூட்டுறவுப் பட்டியலாக்கம் – பொதுநூலகங்களுக்கான சாதகநிலைமைகள்” என்னும் தலைப்பில் நினைவுரையாற்றினார்.
அமரர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் தன்னார்வத்தோடு தனிப்பட சேகரித்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களும், ஏராளமான தமிழரின் தொன்மைசார் மரபுரிமை அரும் பொருள்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்துக்குக் கையளிக்கப்பட்டன.
குடும்பத்தினரால் கையளிக்கப்பட்ட பொருள்களை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முன்னாள் துணைவேந்தரும், பேரவை உறுப்பினருமான வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, பதில் நூலகர் திருமதி கல்பனா சந்திரசேகர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதற்கான உடன்படிக்கையில் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தரும், குடும்பத்தினர் சார்பில் அவரது துணைவரும் கைச்சாத்திட்டனர்.
நிகழ்வில் பல்கலைக்கழக நூலக ஆளணியினர், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை