தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட கலாசார படுகொலை தொடர்கிறது - சபா குகதாஸ் தெரிவிப்பு
தமிழர் தாயகத்தில் 1952 இருந்து 2009 வரை சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் பாரிய தமிழ் இனப்படுகொலை நடந்தேறியது அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழர் தாயகத்தின் நிலங்களை அபகரிக்கும் செயற்பாட்டுடன் தமிழர் கலாசாரத்தை அழிக்கும் நிகழ்ச்சி நிரல் தற்போதைய ஆட்சியாளர்களினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
இலங்கைத் தீவில் கடந்த காலம் தொடக்கம் ஆயிரக்கணக்கான சைவ ஆலயங்கள் சிங்கள ஆட்சியாளர்களினால் அழிக்கப்பட்டுள்ளது அதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலயத்தில் நீதிமன்றத்தின் தடையை மீறி நிரந்தரமான பௌத்த விகாரை அமைக்கும் பணியை ஆட்சியாளர்கள் தொடர்கின்றனர் இச் செயற்பாடு நீதித்துறையை அவமதிப்பதுடன் திட்டமிட்ட தமிழர் கலாசாரம் தொடர்பான வரலாற்று ஆதாரங்களைஅழிக்கும் படுகொலை ஒன்று அரங்கேறியுள்ளது.
அண்மையில் பிள்ளையார் சிலைகளுடன் கடத்தல் காரர்கள் குழு அகப்பட்டனர் அவர்கள் கடத்திய சிலைகளுள் காங்கேசன் துறையில் சில வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன பிள்ளையார் சிலையும் காணப்பட்டுள்ளது உண்மையாக காங்கேசன் துறையில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் சட்டவிரோதமாக அண்மையில் விகாரை ஒன்று சிறிலங்கா இராணுவத்தினரால் கட்டப்பட்டது அதன் பின்னணியில் பிள்ளையார் ஆலயத்தை அழிப்பதற்காக மேற் கொண்ட முதற் கட்ட முயற்சியே சிலை கடத்தல் இதுவும் திட்டமிட்ட தமிழர் கலாசாரப் படுகொலை.
இரண்டு நாட்களுக்கு முன்னர் மூதூரில் பிள்ளையார் சிலை அமையப் பெற்ற மலையில் பிள்ளையாருக்கு மேலே திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட பாரிய கலாசார படுகொலை சிங்கள ஆட்சியாளர்களினால் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து எவ்வாறு சிங்கள குடியேற்றங்களை பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் சட்டவிரோதமாக மேற் கொள்கின்றார்களோ அதே போல தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலாசார இடங்களில் புத்தரைக் குடியேற்றி தமிழர் கலாசாரத்தை அழிக்கும் நடவடிக்கையையும் ஆட்சியாளர்கள் சட்டவிரோதமாக மேற் கொள்கின்றனர் - என்றுள்ளது.
கருத்துகள் இல்லை