• Breaking News

    திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்கள் - சம்பவ இடத்தில் குடும்பஸ்தர் பலி...!

     சிலாபம் பகுதியில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

    ஆனமடுவ - சிலாபம் பிரதான வீதியின் சங்கட்டிக்குளம் பகுதியில் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

    ஆனமடுவ முதலக்குளிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே தீ விபத்தினால் உடல் கருகி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், நிகவெரட்டிய வன்னி ரஸ்னாயக்கபுர பகுதியைச் 21 வயது இளைஞர் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நேற்று இரவு 7 மணியளவில் சிலாபம் பகுதியில் இருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிப் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த் திசையில் இருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்ட சில நிமிடங்களில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகளை எடுத்த போதிலும், அவை பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தினால் ஆனமடுவ முதலக்குளிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார் என ஆனமடுவ காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

    அத்துடன், இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 21 வயதான இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக 1990 அவசர சேவை அம்யூலன்ஸ் மூலம் புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    எனினும் இந்த தீ விபத்தில் காயமடைந்த இளைஞனின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    அத்தோடு, இந்த விபத்தின் போது ஏற்பட்ட தீயினால் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் முழுமையாக தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்த நபரின் சடலம் ஆனமடுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆனமடுவ காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனையில், காவல் நிலைய போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad