தமிழரின் இதயபூமி தீவிரமாக சிங்கள மயப்படுத்தப்படுகிறது - சபா குகதாஸ் தெரிவிப்பு...!
தமிழர் தாயகத்தின் இதயபூமியான முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பத்தில் மணலாறு பிரதேசத்தில் உருவாக்கப்பட்டு தனியான சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதுடன் வெலிஓயா என பெயரும் மாற்றப்பட்டது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள குடியேற்றங்களும் காணி அபகரிப்புக்களும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
மகாவலி வலயத்தின் மூலம் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, தென்னமரவடி, நாயாறு, போன்ற தமிழர்களின் பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வட்டுவாகல் நந்திக்கடல் ஆறுமத்தான் குடியிருப்பு போன்ற பகுதியில் கரையோர திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களமும் காணிகளை அபகரித்துள்ளன.
அத்தோடு கோத்த கடற்படை முகாம் விரிவாக்கத்திற்கும் அபகரிக்க தீவிர முயற்சி மக்கள் எதிர்ப்பின் மத்தியில் தொடர்கிறது.
தற்போது மாந்தை கிழக்குப் பகுதியில் சிராட்டிக்குளம், நட்டாங்கண்டல், துணுக்காய், அமைதிபுரம் போன்ற பிரதேசங்களில் 23803 ஏக்கர் தமிழர்களின் பயிர்ச் செய்கை மற்றும் கால்நடை வளர்ப்புக்குரிய பூர்வீக காணிகள் வனவளத் திணைக்களத்தினால் அபகரிப்பதற்கான திட்டங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை