இந்தியாவின் ஒற்றையாட்சி 13ஐ ஏற்க முடியாது : துரோகிகளை மக்கள் வெளியேற்ற வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொதிப்பு...!
தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க நினைக்கும் இந்தியாவின் 13ஆம் திருத்தத்தை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இன்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ். காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கொழும்பில் சில தமிழ் தேசியக் கட்சிகள் கூட்டங்களை நடத்துகின்றன அதில் நாம் பங்கேற்காத நிலையில் அதற்கான காரணங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
30 வருடங்களுக்கு மேலாக நடைமுறைப்படுத்த முடியாத 13ஆம் திருத்தத்தை சிலர் தமது எஜமான்களைத் திருப்திப் படுத்துவதற்காக நினைத்து தமிழ் மக்களை ஒற்றையாட்சியின் கீழ் கட்டுப்படுத்தலாம் என முயற்சிக்கின்றனர்.
தமிழ் தேசிய அரசியலில் ஒரு வருடத்துக்குள் பாரிய சதி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது .
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தமிழ் மக்களிடம் இருந்து ஆதரவு பெருகி வரும் நிலையில் அதற்கு முன்னதாக ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களை கட்டுப்படுத்துவதற்கு கூட்டமைப்பினர் மற்றும் விக்னேஸ்வரன் அணியினர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இந்தியா 13வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கும் நிலையில் அண்மையில் யாழ்ப்பாணம் வந்த வெளியுறவுச் செயலாளரும் 13 தான் தமிழ் மக்களுக்கு தீர்வு சில மாற்றங்களை செய்யலாம் எனவும் கூறியிருந்தார்.
சம்பந்தனும் இந்தியா வலியுறுத்துகின்ற 13ஆவது திருத்தத்தை நாம் ஏற்றாக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே உள்ள நிலையில் அவர் அதனை பல இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
13ஆவது திருத்தத்தை தமிழ் தரப்புகள் சில ஆதரிப்பதன் மூலம் சிங்கள மக்களுக்கு ஒரு செய்தி சொல்லப்படுகிறது. சீனாவை விட்டு வாருங்கள் நாட்டை ஒற்றையாட்சிக்குள் ஆளலாம் என்ற செய்தி சொல்லப்படுகிறது.
தற்போது ஒரே நாடு ஒரே சட்டம் என்கிறார்கள் இப்போதாவது சமஷ்டியை பற்றி பேசவேண்டும் ஒற்றையாட்சியை எதிர்க்கிறோம் என கூற வேண்டும்.
ஆனால் இலங்கை அரசாங்கம் ஒற்றையாட்சியை கொண்டு வந்தால் எதிர்ப்போம் என கூறுகின்றார்கள் 13 மூலம் இந்தியா கொண்டுவரும் ஒற்றை ஆட்சியை ஆதரிப்பவர்கள் பச்சைத் துரோகிகள்.
மக்கள் துரோகிகள் தொடர்பில் விழிப்பாக இருக்கவண்டும் அவர்களை அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றாவிட்டால் அதன் பிரதி பலன்களை மக்களே அனுபவித்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களை ஆள்வதற்கான 13ஆம் திருத்தத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கள்ள மாட்டாது என்பதோடு குறித்த சூழ்ச்சி தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை