மலேரியா கிருமி 21 நாட்கள் வரை உயிர்வாழும் ஆற்றல் கொண்டது - வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவிப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் ஒருவர் மலேரியா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபோரம் என்ற மூல மலேரியாவை ஏற்படுத்தும் கிருமி காணப்பட்டது.
இவர் அண்மையில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு சென்றுள்ளார். இது ஒரு ஆபத்தான சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
அண்மையில் மலேரியா நோயாளிகள் இனங்காணப்பட்டமை தொடர்பாக இன்று (04) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நமது நாட்டில் இருந்து பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு எத்தனிக்கின்றனர். அவர்கள் அங்கு செல்வதற்காக முதலில் ஆபிரிக்க நாடுகளுக்கு செல்கிறார்கள்.
அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கான பயணங்கள் தடைப்பட்டதும் மீண்டும் திருட்டுத்தனமாக எமது நாட்டிற்குள் வருகின்றார்கள். இவர்கள் மலேரியா உள்ள இடத்தில் இருந்து வருகின்றார்கள்.
அவர்களுக்கு அந்த நாடுகளில் சிலவேளை மலேரியா காய்ச்சலும் ஏற்பட்டு இருக்கலாம். இவ்வாறு வருபவர்கள் மீண்டும் எமது பிரதேசத்தில் மலேரியாவை தோற்றுவிக்கின்றார்கள்.
மிக அண்மையில் 3 மலேரியா நோயாளிகள் இனங்காணப்பட்டமை பாரியதொரு அபாய நிலையை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. எனவே நாங்கள் எமது மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்.
காய்ச்சல் இருக்கும் வேளையில் அவர்கள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டால் மலேரியா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் மலேரியா உள்ள நாடுகளுக்கு சென்று வந்தால் அதற்குரிய தடுப்பு மருந்துகளை எந்த ஒரு வைத்தியசாலையிலும் பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது 3 மலேரியா நோயாளிகள் இனங்காணப்பட்டதால் எமது பிரதேசத்திலிருந்து வரும் அனைவருக்கும் மருத்துவ சோதனை செய்தால் நல்லது. அடுத்ததாக நாங்கள் நுளம்பு கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக தற்போது மலேரியா நோய் இனங்காணப்பட்டதால், மலேரியா கிருமியானது ஒருவரில் குறைந்தது 21 நாட்கள் வரை இருக்கலாம். அத்துடன் நுளம்பிலும் 21 நாட்கள் வரை இருக்கலாம்.
எனவே 21 நாட்களுக்கு நாங்கள் எமது சுற்றாடலை சுத்தப்படுத்துவதனால் இந்த மலேரியா கிருமி எமது சமூகத்தில் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.
இதற்குரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை யாழ். மாநகர சபை, கொக்குவில் பிரதேச சபை முன்னெடுத்தால் நல்லது. வருமுன் காப்பதனால் பெருமளவு நோய் ஏற்படுவதை தவிர்க்கலாம். இது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.
குறிப்பாக கொவிட் தொற்றுக்குப் பின்னர் பல நாடுகளில் மலேரியா மீண்டும் வருவது கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கையும் பாதிக்கப்பட்டதை நாம் விழிப்புடன் உணர்தல் வேண்டும் - என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை