பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பயிற்சியின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு!
புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த 11 வயது சிறுவன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 30 ஆம் தேதி பசுமலைப்பட்டியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, வெளிப்பட்ட குண்டு, சுமார் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் நார்த்தாமலை அருகே கொத்தமங்கலப்பட்டியில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தியின் தலையில் தாக்கியது.
படுகாயமடைந்த சிறுவனுக்கு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசிய வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, பசுமலை பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே சிறுவன் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். விசாரணை முடிவில் இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை