கோட்டா அரசில் உள்ள அமைச்சர்கள் குள்ள நரிகள் - சந்திரசேகர் சாடல்!
கோட்டா அரசில் உள்ள அமைச்சர்கள் குள்ளநரிகள் என மக்கள் விடுதலை முன்னணி யாழ். மாவட்ட பொறுப்பாளர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாம் நாட்டை நேசிக்கின்றோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டு வளங்களை இரகசியமாக விற்க ஆரம்பித்துள்ளனர். எரிசக்தி அமைச்சர் உதயன் கம்பன்பில அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்பிக்கவுள்ளார்.
அதிலே திருகோணமலை எண்ணெய் குதங்களை 50 ஆண்டுகளுக்கு இந்திய ஐ.ஒ.சி நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு ஒப்பந்தம் சமர்பிக்கப்படவுள்ளது. அதற்கான சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இவர்கள் அனைவரும் நரிகள் என்பதை நிரூபித்துள்ளனர். குறிப்பாக இலங்கை இந்திய ஒயில் கூட்டுத் தாபனம் என்ற பெயர் அமையும் வகையில் இந்த குத்தகை விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
5 வருடத்துக்கு ஆட்சியில் உள்ள பாவிகள் 50 வருடத்துக்கு நாட்டை விற்று எங்கள் பிள்ளைகளுக்கும் எதுவுமே இல்லாமல் செய்து விடுகின்றனர்.
கடந்த 23 வருடங்களாக எமது நாடு இவ்வாறு தான் விற்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் சரியாகும் என்றால் 49 வீத எண்ணெய் வளங்கள் அவர்களுக்கு சென்றுவிடும். அதன் பின்னர் எரிபொருள் இறக்குமதி, விற்பனை, களஞ்சிய படுத்தல் ஆகியய செயற்பாடுகள் இந்தியாவிடம் முழுமையாக சென்றுவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை