இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்!
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராக இன்றைய தினம் ஊர்காவற்றுறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 7 கடற்றொழில் சங்கங்கள், ஊர்காவற்துறை கடற்றொழில் சங்கங்களின் சமாசம் மற்றும் நண்டு பதனிடும் கம்பனி ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், ஊர்காவற்றுறை சந்தியில் இருந்து பேரணியாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நண்டு பதனிடும் கம்பனி ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் முடிவில் ஊர்காவற்துறை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர். அந்த மகஜரில் உள்ளதாவது,
யாழ். மாவட்ட மீனவர்கள் கடந்த 10 வருடங்களாக வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத தொழில் முறைகளும், குழலுக்கு பாதிப்பும் , மீவைனத்தை அழிக்கும் செயற்பாடுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க , கடற்தொழில் (வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்குபடுத்தல்) திருத்தச் சட்டம், 2017 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கடந்தொழில் தீர்வாழ் உயிரின வளங்கள் ( திருத்தச் ) சட்டம் ஆகிய இரு சட்டங்களும் , பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இன்று வரைக்கும் நடைமுறைப்படுத்தப்படாது மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடாச்சியாக நடந்த வண்ணம் உள்ளது.
2500 இந்திய இழுவைமடிகளால் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது . நட்டத்திற்கான இழப்பீட்டைப் பெற்று வழங்கவும், வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத அனுமதியற்ற தொழில்முறைகளை நிறுத்தவும்.
நாங்கள் கடல்கடந்த தீவுகளில் வாழ்ந்தாலும், எங்களுடைய கோரிக்கைகளை, பாதிப்புக்கள் வெளிக்கொண்டு வர பல்வேறு தடைகள் இருப்பினும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்து மீனவருடைய வாழ்வாதாரத்தையும் , எமது கடல்வளத்தையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் - என்றுள்ளது.
கருத்துகள் இல்லை