யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்தின் மீது தாக்குதல்! ஒருவர் கைது
யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வேளை குறித்த பேருந்தினை இடைமறித்த கும்பல் ஒன்று பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், சாரதி மற்றும் நடத்துனர் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.
இதில் சாரதி மற்றும் நடத்துனர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, பருத்தித்துறை – திருகோணமலைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது , நெல்லியடி புறாப்பொறுக்கி சந்தி பகுதியில் வைத்து இனம் தெரியாத கும்பல் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இன்று புதன் கிழமை அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் சாரதியால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை