மூடிய அறைக்குள் முக்கிய சந்திப்பு நடாத்திய சுமந்திரன் எம்.பி!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கட்சித் தலைவர்கள் மற்றும் மூன்று முக்கிய நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர்களுடன் மூடிய அறைக்குள் முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சுற்றுகளாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் கடன் பெற்றுக்கொண்டுள்ள தரப்புகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவும், கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும் என கோரி இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இரண்டு சுற்றுக் கூட்டங்கள் ஜனவரி 27ம் திகதியும், இரண்டாவது கூட்டம் வியாழக்கிழமையும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
கடன் வழங்கியுள்ள தரப்பினர்களுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் கடன்களை மீள திட்டமிடுவதற்கு அரசாங்கத்திடம் முன்மொழிவதற்கு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் தீர்மானித்துள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு சில அந்நியச் செலாவணி அரசாங்கத்தின் கைகளில் விடப்படும் என்றும், எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்ய பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கடனைத் மீளச் செலுத்துவதற்கு கடன் வழங்கியவர்களுடனான எந்தவொரு ஏற்பாட்டையும் செய்யும் போது அரசாங்கத்தின் சமூக நல நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தின் பொது நிதிக் குழுவின் (PFC) முன்னாள் தலைவர் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை