யாழில் எரிபொருள் நிரப்புவதற்கு குறுக்கே பாய்ந்த அமைச்சர்களை "கொலைகாரப் பாவிகள்" என திட்டித்தீர்த்த மக்கள்!
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் பனை தென்னை வள உற்பத்தி கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னான்டோ ஆகியோர், ஏற்கனவே வரிசையில் நின்ற வாகனங்களிற்கு இடையில் புகுந்து எரிபொருள் பெற முன்றமையினால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இரு அமைச்சர்களும் ஐந்து வாகனங்களில் யாழிற்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் திரும்பிச் செல்வதற்காக வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்தனர்.
இதன்போது குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் காத்திருந்த நிலையிலும் அமைச்சரின் வாகனத்திற்கு உடனடியாக டீசல் கொள்கலனை முழுமையாக நிரப்ப முயன்றனர்.
இதன்போது எரிபொருளிற்காக காத்திருந்த வாகன உரிமையாளர்கள் "உங்களால தானேடா நாம் வரிசையில் நிற்கின்றோம். கொலைகாரப் பாவிகளா, இந்த நிலமையில் எமக்கு 3 ஆயிரத்திற்கு மட்டுமே டீசல் கொலை காரரிற்கு புல்லாங் கேட்குதா. அடிக்க முடியாது திரும்பி போங்கடா" என கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதன்போது சம்பவத்தை செய்தியாக்கிய ஊடகவியலாளரையும் அமைச்சரன் உதவியாளர் படம்பிடித்து அச்சுறுத்தியதோடு மக்களிடம் நீண்ட தர்க்கத்தில் ஈடுபட்டு அரை மணி நேரத்தின் பின்பு 11 ஆயிரத்து 200 ரூபாவிற்கு டீசலை நிரப்பி வெளியேறினர்.
இதன்போது மக்கள் "இவங்களாள வாழவும் முடியவில்லை, நின்மதியாக சாகவும் முடியவில்லை, அதேநேரம் எரிபொருளும் இல்லை மின்சாரமும் இல்லாத நேரத்தில் 50 சதத்திற்கு பிரியோசனம் இல்லாமல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகின்றனர்" என தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.
கருத்துகள் இல்லை