காரைநகர் – ஊர்காவற்றுறை பாதை; திடீரென இயங்க மறுத்த இயந்திரம்! பணியாளர்களின் அசமந்தமே காரணமாம்
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே சேவையில் ஈடுபடும் படகுப்பாதையின் இயந்திரம் நேற்று (09) திடீரென பழுதடைந்ததால் அரச உத்தியோகத்தர்கள் தாமதமாக அலுவலகங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
எனினும், இயந்திரப் பழுது பாதைப் பணியாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டது என பின்னர் கண்டறியப்பட்டது.
மேற்படி பாதையின் இயந்திரம் பழுதடைந்தமையால் கடந்த சில வாரங்களாக பாதைச் சேவை இடம்பெறவில்லை. பின்னர் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா வரையான செலவில் இயந்திரம் திருத்தம் செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.
இந்நிலையில், நேற்று காலை இயந்திரம் திடீரென இயங்கவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, இயந்திரத்திற்கு புதிய பிளக் மாற்றுமாறு கூறியதாகவும் அதை பணியாளர்கள் மாற்றவில்லை என்பதும் தெரியவந்தது.
புதிய பிளக் மாற்றிய பின்னரே பயணம் தொடர்ந்தது. இதனால் அரச உத்தியோகத்தர்கள் பலரும் குறுகிய நேர விடுமுறையில் அலுவலகம் சென்றனர் எனவும் கூறப்பட்டது.
பாதையின் இயந்திரத்தை சரியான முறையில் பராமரிப்பதன் மூலம் தமது தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை