• Breaking News

    சமஸ்டியை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வவுனியாவில் பேரணி!

     


    ஒற்றையாட்சியை நிராகரித்து, சமஸ்டியை வலியுறுத்தி வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மக்கள் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

    ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடத்தவுள்ள பேரணிக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    சிங்கள பௌத்த பேரினவாதஅரசு புதிய அரசியல் யாப்பினை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

    சிறீலங்காவுக்கான நான்காவது அரசியல் யாப்பும் மிக இறுக்கமான சிங்கள பௌத்த ஆதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியல் யாப்பாகவே அமையவுள்ளது.

    இந்நிலையில் தமிழ்த் தரப்பின் கடமையானது ஒற்றையாட்சியை முற்றாக நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.

    ஆனால் அதற்கு மாறாக கடந்த 34 வருடங்களாக நடைமுறையிலுள்ள, தோல்வியடைந்த, ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியுள்ளமையானது, தமிழ் மக்களின் எதிர்காலத்தை பேரினவாதத்திற்கு நிரந்தரமாக அடிமையாக்கும் சூழ்ச்சியாகும்.

    இச்சதிமுயற்சியை முறியடிப்பதற்காக விழிப்படைய வேண்டியது அனைத்து தமிழ் மக்களதும் வரலாற்றுக் கடமையாகும்.

    அந்த வகையில், வடக்கு கிழக்கிலுள்ள பொதுசன அமைப்புக்களையும், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் அரசியல் தரப்புக்களையும் இணைத்து – ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான 13ஆம் திருத்தத்தையும் முற்றாக நிராகரித்து – இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்த சமஸ்டி’ அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி கடந்த 30-01-2022 திகதியன்று யாழ் நல்லூர் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற பேரணி முடிவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கிட்டுப்பூங்கா பிரகடனம் செய்யப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad