பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் 3,250 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் – வடிவேல் சுரேஸ் எம்.பி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம், சம்பள நிர்ணய சபையினூடாக 3,250 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பிலான கோரிக்கை கடிதமானது, தொழில் அமைச்சின் சம்பள நிர்ணய சபையின் செயலாளர் எச்.ஜி.வசந்த குணவர்தன, தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர, திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது.
தொழில் திணைக்களத்துக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டு இருந்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் மற்றும் சங்கத்தின் உபதலைவர் சுஜித் சஞ்சய பெரேரா, சங்கத்தின் உத்தியோகத்;தர்கள் இணைந்து கோரிக்கை கடிதத்தை கையளித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஸ்,
தற்போதைய வாழ்க்கை பொருளாதார நெருக்கடி சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் வேதனத்தை 3,250 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.
இந்தக் கடிதத்தை ஏற்று உடனடியாக சம்பள நிர்ணய சபையை அழைத்து இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து தீர்வை பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.
மேலும் வழமை மாறாத சலுகைகள் உடனேயே வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உறுதியாக இருக்கின்றது என்றார்.
கருத்துகள் இல்லை