சீனக்கப்பலின் வருகையின் பின் பூகோள அரசியலில் கொதிநிலை! - சரவணபவன் சுட்டிக்காட்டு
சீனாவின் உளவுக் கப்பலின் வருகையோடு பூகோள அரசியல் கொதிநிலைக்கு சென்றுள்ளது. இந்தக் கொதிநிலையும் இவ்வாறான நெருக்குதல்களும் இத்தோடு முடிந்து விடப்போவதுமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 95ஆவது பிறந்ததின நினைவு நிகழ்வு வலி.மேற்கு பிரதேச சபையில் நேற்றையதினம் இடம்பெற்றது. இதன்போது தலைமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
இலங்கைத் தமிழர்களுக்கு கிடைத்த ஆளுமைகளில் தனித்துவமானவர் அமிர்தலிங்கம். இந்தத் தீவில் தமிழர்களின் தனி நாட்டுக்கான போராட்டத்துக்கு விதை போட்டவர்களில் அவரும் ஒருவர். இந்த விடயம் தொடர்பில் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், தனி நாட்டுக்கான தமிழ் மக்களின் ஆணை, அமிர்தலிங்கத்தால்தான் கிடைக்கப்பெற்றது என்பதை மறுதலிக்க முடியாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், வன்னியில் நடத்திய சர்வதேச செய்தியாளர் மாநாட்டில் அதை உறுதிப்படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்த இலங்கைத் தீவைச் சுற்றி நடக்கின்ற பூகோள அரசியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப காய்களை நகர்த்திய ஒரு மகத்தான இராஜதந்திரியாகவும் அமிர்தலிங்கத்தைச் சொல்லமுடியும்.
இன்று பலர் பூகோள அரசியல், இராஜதந்திரம் என்று கூறிக்கொண்டு எமது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில், இந்தியாவின் பங்கைப் புரிந்து கொண்டு, சிங்கள தேசத்தவரின் சடுகுடு ஆட்டத்தைக் கணித்து அதற்கு ஏற்ப தமிழர்களின் விடயத்தில் அவர் சாதித்துக்காட்டினார்.
அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரை மற்றும் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசி, ஈழத் தமிழர்களுக்குச் சார்பான நிலைப்பாட்டை இந்தியாவை எடுக்க வைப்பதில் கனதியான பங்காற்றியவர் அமிர்தலிங்கம்.
ஆனால் அதன் பின்னரான சூழலில் இந்தியா, ஈழத் தமிழ் மக்களை பகடைக்காய் ஆக்க முயன்றபோது அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவரும் அவர்தான். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் போதாமைகளைப்பற்றியும், அதன் ஊடாக ஈழத் தமிழர்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது பற்றியும், அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் அனுப்புவதற்கும் அமிர்தலிங்கமே தலைமை தாங்கினார்.
ஆயுதப் போராட்டக்காலம் முடிவுக்கு வந்த பின்னர், தமிழர்களுக்கு என்று வெளிவிவகாரக் கொள்கை இருகின்றதா என்று கேட்கும் அளவுக்கு நிலைமைகள் படுமோசமாகவே உள்ளன. தற்போது வல்லாதிக்க வல்லூறுகளுக்கு இலங்கை என்ற தீவு இரையாகிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் உளவுக் கப்பலின் வருகையோடு அந்தப் பூகோள அரசியல் கொதிநிலைக்கு சென்றுள்ளது. இந்தக் கொதிநிலையும் இவ்வாறான நெருக்குதல்களும் இத்தோடு முடிந்து விடப்போவதுமில்லை.
எம்மைச் சுற்றி நடக்கின்ற இந்த விடயங்களை எப்படி நாம் கையாளப்போகின்றோம்? தனித்துவமான இனமாக இந்தத் தீவில் வாழ்வதற்கு துடிக்கும் நாங்கள் அதற்காக என்ன செய்யப்போகின்றோம் என்ற திடமான வழிவரைபடம் கூட இல்லாமல், எல்லாவற்றுக்கும் இழுத்த இழுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றோம்.
ஈழத் தமிழர்களின் வெளிவிவகாரக் கொள்கை என்பது தனிமனிதர்கள் சிலரின் கொள்கையாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அன்று அமிர்தலிங்கம் போன்றோர் தூர நோக்கோடும் தீர்க்க தரிசனத்தோடும் விடயங்களைக் கையாண்டனர். ஆனால் இன்று, தத்தமது தனிப்பட்ட நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் வெளிவிவகாரத்தை கையாண்டு, ஈழத் தமிழர்களைத் தொடர்ந்தும் தத்தளிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஈழத் தமிழினம் கரைசேராமல் இருப்பதற்கு இதுவும் பிரதான காரணம். இந்தியா போன்றதொரு வல்லரசு எமது விடயத்தில் கரிசனை காண்பிக்கும்போது அதற்கு நாம் செங்கம்பளம் விரித்திருக்கவேண்டும். அதைவிடுத்து, பாரததேசம் நொந்து கொள்ளும் அளவுக்கு எமது செயற்பாடுகள் அமைந்துவிடக்கூடாது. அவர்கள் எம்மைப் பேச்சுக்கு அழைக்கும்போது அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.
இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பில் ஈழத் தமிழர்களை மையமாகக் கொண்ட கட்சிகள் எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாடே இழையோடுகின்றது. அதாவது, ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளமாட்டார்கள் என்ற உறுதியை அனைத்து தமிழ் கட்சிகளும் வழங்கி நிற்கின்றன என்பதற்கும் அப்பால் அதுதான் உண்மை.
ஈழத் தமிழர்கள் விடயம் இந்தியாவைத் தாண்டி நகராது என்பதை உணர்ந்தமையாலேயே தமிழ் கட்சிகள் இந்த விடயத்திலாவது ஒன்றுபட்டு நிற்கின்றன. ஆனாலும், தமிழர்களின் வெளிவிவகாரத்தைக் கையாளும் ஒரு சில நபர்கள், இந்த யதார்த்தத்தைப் புரியாது செயற்படுவது என்பது எமது தலையில் நாமே மண் அள்ளிப் போடுவதைப்போன்றது - என்றார்.
கருத்துகள் இல்லை