யாழ். பண்டத்தரிப்பு கால்நடை வைத்தியசாலையின் பணியாளர்கள் அசமந்தம் - மக்கள் விசனம்!
பண்டத்தரிப்பு அரச கால்நடை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்படும் கால்நடைகளை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறிய சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று, கால்நடை ஒன்றிற்கு உடல் சுகயீனம் ஏற்பட்டு உணவு உட்கொள்ளாத நிலையில் குறித்த கால்நடைக்கு வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொடுப்பதற்காக அதன் உரிமையாளர் குறித்த வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
அவர் வைத்தியசாலைக்கு சென்ற நேரம் வைத்தியர் அங்கு இருந்திருக்கவில்லை. "வைத்தியர் எங்கே" என அவர் வினவியவேளை "வைத்தியர் வெளியே சென்றுவிட்டார்" என அங்கிருந்த பணியாளர்கள் கூறினர்.
"வைத்தியர் எப்போது வருவார் என கேட்பதற்கு அவரது தொலைபேசி இலக்கத்தை தாருங்கள்" எனக்கேட்ட வேளை "வைத்தியரது தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் வழங்குவதில்லை" என அவர்கள் கூறினர்.
"வைத்தியரின் தொலைபேசி இலக்கம் தரா விட்டால் நீங்களே ஒருதடவை அழைப்பு மேற்கொண்டு கேட்டு சொல்லுங்கள்" என அவர் கேட்டார். அதற்கு அவர்கள் "எங்களது தனிப்பட்ட தொலைபேசியில் இருந்து வைத்தியருக்கு அழைப்பு மேற்கொள்ள முடியாது" என அவர்கள் கூறினர்.
"தனிப்பட்ட தொலைபேசியில் அழைப்பு மேற்கொள்ளாவிட்டால் வைத்தியசாலையின் நிலையான இணைப்பு தொலைபேசியில் இருந்து அழைத்து கேளுங்கள்" என அவர் கேட்டார். அதற்கு "வைத்தியசாலையில் அப்படி வசதிகள் இல்லை" என அவர்கள் கூறினர். அதன்பின்னர் அவர் வைத்தியசாலையில் இருக்கும்போது வைத்தியசாலையின் நிலையான இணைப்பு தொலைபேசி சிணுங்கியது. உடனே அவர் "நிலையான இணைப்பு தொலைபேசி இல்லை என்று கூறினீர்கள் இது எவ்வாறு வந்தது" என கேட்டதற்கு அவர்கள் சமாளித்தனர்.
அவர் வைத்தியசாலையின் நிலையான இணைப்பு தொலைபேசி இலக்கத்தினை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சில மணிநேரம் கழித்து அழைப்பு மேற்கொண்டு "வைத்தியர் வந்துவிட்டாரா? நான் கால்நடையை கொண்டு வரலாமா?" என கேட்டவேளை "வைத்தியர் வரமாட்டார் விரும்பினால் தனியார் வைத்தியசாலைக்கு உங்களது கால்நடையை அழைத்துச் சென்று சிகிச்சையை பெற்றுக் கொடுங்கள்" என கூறிவிட்டு அழைப்பினை துண்டித்தனர்.
அரச துறையில் பணியாற்றுபவர்கள் இவ்வாறு தனியார் துறைக்கு செல்வதற்கு வழிகாட்டுவது என்பது மிகவும் வேதனையளிக்கிறது என்றும் இந்த வைத்தியசாலையில் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்றும் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கின்றார்.
கருத்துகள் இல்லை