• Breaking News

    சீனாவுக்கு எதிரான பிரேரணை காரைநகர் பிரதேச சபையில் 6 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

     


    காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் 10 மணியளவில் கசூரினா கடற்கரையில் உள்ள பொது மண்டபத்தில், தவிசாளர் பாலச்சந்திரன் தலைமையில் ஆரம்பமானது.

    சபை அமர்வின்போது தவிசாளர், இலங்கை மீதான சீனாவின் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும் என்ற பிரேரணையை சபையில் முன்வைத்தார்.

    தவிசாளர் முன்வைத்த பிரேரணை வருமாறு,

    "வடக்கில் சீனாவின் திட்டமிட்ட வருகை தமிழ் மக்களை யுத்தப் பதட்ட நிலைக்கு  தள்ளும்.

    வடக்கு மாகாணத்தில் சீனாவின் திட்டமிட்ட வருகை 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை மீண்டும் ஒரு யுத்தப் பதட்ட நிலைக்கு தள்ளுவதாக காரைநகர் பிரதேச மக்களின் பிரதிநிதியான என்னால் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரேரணை கொண்டுவரப்படுகின்றது

    அதாவது வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் தீவகப் பகுதிகளை  சீனா கடல் அட்டை பண்ணைகள் என்ற போர்வையில் எமது கடல் வளத்தை எமது பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயற்படுத்த முனைவதை வன்மையாக கண்டிக்கின்றேன்

     இலங்கையின் வெளிநாட்டு கடன்களில் 46 வீதமான வெளிநாட்டு கடன் சீனாவால் வழங்கப்பட்டதாக அறியக் கிடைத்துள்ள நிலையில் இலங்கைக்கு உதவி வழங்குவதாக கரிசனை காட்டி   சீனாவின் ஆதிக்கம் தெற்கிலிருந்து வடக்கு வரை நீள ஆரம்பித்துள்ளது.

    30 வருட கால யுத்தத்தில் இருந்து மீண்ட தமிழ் மக்கள் பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் இதுவரை முழுமையாக மீள முடியாத நிலையில் உள்ளனர்.

    இவ்வாறான நிலையில் எமது காரைநகர் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் கணிசமான மக்கள் மீனவ சமூகத்தைச் சார்ந்த மக்களாகவும் கடலை நம்பி தமது வாழ்வாதாரத்தை ஈடு செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

     இந்நிலையில் சீனா வடபகுதி கடற்பரப்புக்களில்  குறிப்பாக தீவகப்பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில்  கடல் அட்டை பண்ணை அமைக்கப் போவதாக ஊடகங்கள் மூலம் அறிய கிடைத்திருக்கின்றது

    வடபகுதியில் கடற்கரையோரமாக வாழ்கின்ற மக்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற மக்களாக வாழ்கின்ற நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் கடல் அட்டைப் பண்ணைகள் அமைப்பதை ஏற்க முடியாது.

    வடபகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்குமானால்  இந்தியா  தனது  தேசிய பாதுகாப்பு கருதி வடபகுதியில் தனது இராணுவ ஆதிக்கத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கள் தள்ளப்படும்.

    இவ்வாறான நிலை ஏற்படும் போது வடபகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு மீண்டும் ஒரு யுத்தப் பதட்டம் ஒன்றை வடக்கு  மக்கள்  எதிர் நோக்க வேண்டிய சூழல் உருவாகும்.

    இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டாத சீனா குறுகிய காலத்தில் வடபகுதி மக்களுக்கு செய்த உதவியை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டி உள்ளது.

    சீனாவுக்கு வடபகுதியில் ஏற்பட்ட திடீர் கரிசனை இந்தியாவை வேவு பார்க்கும் தளமாக வட பகுதியை  பயன்படுத்த நினைப்பது கடந்த வருடம் யாழ் வந்த சீனத் தூதுவரின் செயற்பாடுகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.

    சீனாவும் உலக வல்லரசு  என்ற வகையில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு உதவி செய்ய விரும்பினால்  மனிதாபிமான முறையில் அதனை முறைப்படி வழங்க முன்வரவேண்டும்.

    அவ்வாறில்லாமல் இராஜதந்திர ரீதியில் இந்தியாவை குறி வைப்பதற்காக வடபகுதி மக்களை பயன்படுத்த நினைத்தால் மக்கள் அதனை எதிர்க்கத் தயங்க மாட்டார்கள்.

    மேலும் இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் ட்விட்டர் பதிவில்  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் முகமாகவும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் கருத்துப் பதிவிட்டமை  தொடர்பில் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

    ஆகவே இலங்கையில் உள்ள சீனத்தூதரகத்தை மக்கள் பிரதிநிதியாகிய  நான் தாழ்மையாக கேட்பது 30 வருட யுத்தத்திலிருந்து மீண்டு வருகின்ற வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புகின்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் தங்களின் செயற்பாடுகள் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."

    இந்த பிரேரணையானது சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதையடுத்து 8 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் ஈ.பி.டி.பி கட்சியின் இரு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். 6 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad