• Breaking News

    இலங்கையை வந்தடைந்தார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!

     


    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் கோட்டாபய ராஜபக்ச தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

    தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை வரவேட்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமானநிலையம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என தெரிவித்து, மக்கள் சுமார் நான்கு மாத காலம் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

    இந்த போராட்டங்கள் வலுப் பெற்ற நிலையில், கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் வாசஸ்தலம் ஆகியவற்றை பொது மக்கள் கைப்பற்றியிருந்தனர்.

    இதையடுத்து, தலைமறைவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக், கடந்த மாதம் 13ம் திகதி மாலைத்தீவு சென்று, அங்கிருந்து 14ம் திகதி சிங்கப்பூர் பயணமானார். சிங்கப்பூரிலிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பிய கோட்டாபய ராஜபக்ச, சிறிது காலம் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்தார்.

    அதன்பின்னர், சிங்கப்பூரிலிருந்து கடந்த 11ம் திகதி தாய்லாந்து நோக்கி தனது மனைவியுடன் பயணித்த அவர், தற்போது அங்கு தங்கியுள்ளார். வெளிநாட்டில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்சவின் செலவீனங்கள் அனைத்தும், அவரது சொந்த பணத்திலேயே செலவிடப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

    நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி வரலாற்றில் தனது பதவியை இராஜினாமா செய்த முதலாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச கருதப்படுகின்றார். தனது பதவிக்காலத்தின் பாதி காலம் முடிவதற்கு முன்பே அவர் பதவியை விட்டு விலகினார்.

    எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் கடந்த மாதம் 24ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், கடைசி நேரத்தில், பாதுகாப்பு தொடர்பான பல சிக்கல்கள் காரணமாக அவரது வருகை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுடன் நடத்திய கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவர் நாடு திரும்புவதற்கான சரியான தருணம் இன்னும் வரவில்லை என தெரிவித்திருந்தார்.

    இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் அவரை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad