அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது - ஜீ.எல்.பீரிஸ்
இந்த அரசாங்கம் எமது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் கொழும்பில் இன்று (27) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட பல சந்தர்ப்பங்களை நாம் அவதானித்துள்ளோம்.
எனினும், கடந்த வெள்ளிக்கிழமை விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றாக மீறும் செயற்பாட்டை இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கையொப்பமிடப்பட்ட விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
1955ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க அரச இரகசியங்கள் சட்டத்தின் 2ஆம் அத்தியாயத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.
கொழும்பின் சில பகுதிகள் அதிவிசேட பாதுகாப்பு வலயங்களாக பெயிரிடப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது.
1955ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க அரச இரகசியங்கள் சட்டம் என்பது 67 வருடங்கள் பழமையான சட்டமாகும்.
அந்த சட்டத்தையே அரசாங்கம் தங்களது தேவைக்காக மீளவும் பயன்படுத்திக்கொண்டுள்ளது.
மக்களை ஒடுக்குவதற்காக இந்த வர்த்தமானி அறிவித்தலானது நீண்டதூரம் செல்லவுள்ளது.
வர்த்தமானி வெளியீட்டிள் உள்ளடக்கப்பட்ட விடயங்களுக்கும் 1955ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க அரச இரகசியங்கள் சட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
எனவே இவ்விடயம் தொடர்பில், அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து எடுத்த தீர்மானங்கள் தவறானவை. சட்டவிரோத செயற்பாடுகளாகவே அவை அமைந்துள்ளன.
அமைச்சரவை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் இரகசிய தீர்மானங்களை பாதுகாப்பதற்காகவே 1955ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க அரச இரகசியங்கள் சட்டம் காணப்படுகின்றது.
இந்த சட்டத்தின் கீழ் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதற்கு இந்த சட்டத்தினால் எவ்வித பலமும் அரசாங்கத்துக்கு கிடைக்காது.
கருத்துகள் இல்லை