நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட அரிசியில் விஷம் கலந்துள்ளது? - வெளியான பகீர் தகவல்!
விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் தவறானது என பூச்சிக்கொல்லி பதிவு அலுவலகத்தின் பதில் பதிவாளர் லசந்த ரத்னவீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பூச்சிக்கொல்லி பதிவேட்டு அலுவலகத்தினால் அவ்வாறான ஆய்வு முடிவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வொன்றை மையப்படுத்தி, குறித்த செய்திகளை வெளியாகியுள்ளன. எனினும், இந்தச் செய்திகளின் உள்ளடக்கங்களில் குறைபாடுகள் உள்ளதாகவும் ரத்னவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பொய்யான செய்திகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும் என்பதால், இவ்வாறான விடயங்களை எழுதும்போது உரிய தரப்பினரிடம், சரியான தகவல்களைப் பெற்று, உறுதி செய்துகொள்வது மிகவும் பொருத்தமானது எனவும் பூச்சிக்கொல்லி பதிவு அலுவலகத்தின் பதில் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.
இது 2017ஆம் ஆண்டு கண்டி பிரதேசத்தில் 68 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை அடிப்படையாக வைத்து இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இந்த ஆய்வுத் தகவல்களும் தவறாகப் பதிவாகியிருக்கிறது என ரத்னவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
வெற்று உலோகத் துகள்கள் பொதுவாக சிறிய அளவில் இருப்பதால், அவை பத்து இலட்சத்தில் ஒரு பங்காகவே அளவிடப்படுகின்றன. ஆனால், அந்த வெற்று உலோகங்கள் நூற்றுக்கு ஒரு பங்கு வீதத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பூச்சிக்கொல்லி பதிவாளர் நாயகம் கருத்து வெளியிடுகையில்,
உலகில் எங்கும் சதவீதத்தில் வெற்று உலோகத்துகள் இருப்பதாக கண்டறியப்படவில்லை. அது நடைமுறையில் இல்லை. முறையான ஆய்வுகள் இன்றி இந்த ஆய்வு அறிக்கை பதிவாகியுள்ளது.
தவறான கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் தகவல்களை வெளியிடுவது பொதுமக்களுக்கு இடையூறாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் இவ்வாறான எந்தவொரு முடிவுகளும் பதியப்படவில்லை என்றும் அவ்வாறு இருக்கும்பட்சத்தில் இப்படியான செய்திகளை வெளியிடுவது அடிப்படையற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
தவறான ஆதாரங்களுடன், வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்திகள் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயற்பாடு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிசிர கொடிகார தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை