• Breaking News

    பட்டப்பகலில் கஷ்டப்பட்டு வீட்டினை உடைத்து பித்தளை நகைகளை திருடிச்சென்ற அப்பாவித் திருடர்கள் - அராலியில் சம்பவம்!


    இன்றையதினம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பித்தளை நகைகள் களவாடப்பட்டுள்ளன.

    இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

    இன்று காலை, வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்றுள்ளார். அவரது மனைவி அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிவரும் நிலையில் அவரும் பணிக்கு சென்றுள்ளார்.

    இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திய திருடர்கள் குறித்த வீட்டுக்குச் சென்று வராந்தா கதவனை தள்ளி உடைத்துவிட்டு உள்ளே சென்றனர். வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடுதலில் ஈடுபட்டனர்.

    பின்னர் திருடர்கள், பைபிளுக்கு கீழே இருந்து சுவாமி அறையின் திறப்பினை எடுத்து கதவினை திறந்துகொண்டு சுவாமி அறையின் உள்ளே சென்று அலுமாரியை திறந்து, அலுமாரியின் உள்ளே இருந்த பொருட்களை எடுத்து கீழே வீசிவிட்டு சல்லடை போட்டுத் தேடுதலில் ஈடுபட்டனர்.

    இதன்போது பித்தளை நகை உள்ள பேணி அவர்களது கைகளில் சிக்கியது. தங்களது கைகளில் சிக்கியது பித்தளை நகை உள்ள பேணி என்று தெரியாத அப்பாவித் திருடர்கள் அதனை திருடிச் சென்றுள்ளனர்.

    பாடசாலையில் பணியை முடித்து வீட்டிற்கு வந்த ஆசிரியை, வீடு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் வீசப்பட்டு இருந்த நிலையில் வீட்டிற்குள் திருடர்கள் வந்து சென்றிருந்ததை அவர் உணர்ந்தார்.

    இதனையடுத்து அவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad