குருந்தூர் மலை ஆக்கிரமிப்புக்கு இரகசிய திட்டங்கள் - சுகாஷ் அதிருப்தி
கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள விசேட குழு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குருந்தூர் மலையில் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ள இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து எமக்கு தகவல் கிடைத்தது.
கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நாங்கள் இங்கே வந்து பார்த்தவேளை அந்த முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளதாக உணர்கிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலையை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வந்த குழுவினர் முல்லைத்தீவிலேயே தொடர்ந்தும் முகாமிட்டு தங்கி உள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
எங்களைப் பொறுத்தவரையில் தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த பேரினவாதம் இவ்வாறு ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வதை அனுமதிக்கப்போவது கிடையாது.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் விழிப்பாக இருக்க வேண்டும். எந்த வகையில் ஆக்கிரமிப்புகள் வந்தாலும் நாங்கள் ஒன்று கூடி எமது திரட்சியையும் எதிர்ப்பினையும் காட்டுவதன் மூலம் மட்டுமே எமது தாயக பூமியை பாதுகாக்க முடியும். அந்த வரலாற்றுக் கடமையை நாங்கள் செய்துகொண்டே இருப்போம் - என்றார்.
கருத்துகள் இல்லை