போதைப்பொருள் வர்த்தகத்தை முடக்கும் நோக்கில் விசேட செயலணி!
போதைப்பொருள் வர்த்தகத்தை முடக்கவும் கட்டுப்படுத்தவும் தனியான விசேட செயலணியொன்று தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்
போதைப்பொருட்களை வழங்குதல், விநியோகித்தல், விற்பனை செய்தல், மற்றும் பயன்படுத்துதல் ஆகிய விடயங்களை இந்த செயலணி மூலம் கட்டுப்படுத்தவும் முற்றாக முடக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் போதைப்பொருள் பாவனை காரணமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், இளைஞர்கள் பெருமளவில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் நிலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தவும் பாரிய தொகையொன்றை அரசாங்கம் செலவிட நேர்ந்துள்ளது.
இவற்றை கருத்தில்கொண்டே போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக முடக்குவதற்கும் கட்டுப்படுத்தவும் புதிய செயலணியொன்று தாபிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் மற்றும் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை