• Breaking News

    வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம்!

     இந்திய கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஆட்ட ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்தது.

    இந்த மைல்கல் முடிவு, பிசிசிஐ-யின் உச்ச கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிசிசிஐ வழங்கும் மத்திய ஒப்பந்தத்தின் கீழ் வரும் வீராங்கனைகளுக்கு இந்தப் பலன் கிடைக்கும்.

    இதன்படி, வீராங்கனைகளுக்கு ஒரு ஆட்டத்துக்கான ஊதியம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும், ஒன் டே கிரிக்கெட்டில் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும், டி20 கிரிக்கெட்டில் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும் உயா்த்தப்படுகிறது
     
     

     இதுதொடா்பாக பிசிசிஐ தலைவா் ரோஜா் பின்னி கூறுகையில், ‘இந்த முடிவு நாட்டில் கிரிக்கெட் வளா்ச்சிக்கு நல்லதொரு களம் அமைவதுடன், மகளிா் கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாகும்’ என்றாா்.

    பிசிசிஐ செயலாளா் ஜெய் ஷா கூறுகையில், ‘ஏற்றத்தாழ்வை குறைப்பதை நோக்கிய இந்த முக்கிய நடவடிக்கையின் மூலமாக, இந்திய கிரிக்கெட்டில் நாம் புதிய காலகட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம்’ என்றாா்.
     
    பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு இந்திய வீராங்கனைகள் வரவேற்பு தெரிவிக்க, முன்னாள், இந்நாள் கிரிக்கெட்டா்கள் பலா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
    டெஸ்ட் ஒன் டே டி20
    பழைய ஊதியம் ரூ.4 லட்சம் ரூ.1 லட்சம் ரூ.1 லட்சம்
    புதிய ஊதியம் ரூ.15 லட்சம் ரூ.6 லட்சம் ரூ.3 லட்சம்
    2 ஆவது நாடு
    சா்வதேச கிரிக்கெட்டில் இரு பால் கிரிக்கெட்டா்களுக்கும் சம ஊதியம் வழங்கும் நாடுகளின் வரிசையில் 2-ஆவதாக இணைகிறது இந்தியா. அத்தகைய முதல் நாடாக நியூஸிலாந்து இந்த ஆண்டில் ஏற்கெனவே முந்திக்கொண்டது. ஆஸ்திரேலியாவும் சம ஊதிய முறையை அமல்படுத்த பரிசீலித்து வருகிறது.
    ஒப்பந்த தொகையில் மாற்றமில்லை
    ஆட்ட ஊதியத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ள பிசிசிஐ, மகளிருக்கான மத்திய ஒப்பந்தத் தொகையில் மாற்றம் செய்யவில்லை. கிரேடு ‘ஏ’ ஒப்பந்தத்துக்கு ரூ.50 லட்சம், கிரேடு ‘பி’-க்கு ரூ.30 லட்சம், கிரேடு ‘சி’-க்கு ரூ.10 லட்சம் என்ற அளவில் நீடிக்கிறது. இதுவே ஆடவா் பிரிவில் ‘ஏ+’ ஒப்பந்தத்துக்கு ரூ.7 கோடி, ‘ஏ’-க்கு ரூ.5 கோடி, ‘பி’-க்கு ரூ.3 கோடி, ‘சி’-க்கு ரூ.1 கோடி என்ற அளவில் இருக்கிறது.

     
     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad