"ஷெஹான் கருணாதிலக்க" உலகப் புகழ்பெற்ற Booker விருதினை சுவீகரித்த இலங்கையர்
The Seven Moons of Maali Almeida என்ற நூலிற்காக ஷெஹான் கருணாதிலக்க இந்த விருதினை சுவீகரித்துள்ளார்.
பிரித்தானியாவில் நடைபெற்ற விழாவில் மன்னரின் பாரியார் கெமிலா பார்க்கர், ஷெஹான் கருணாதிலக்கவிற்கு இந்த விருதையும் பணப்பரிசிலையும் வழங்கினார்.
ஐக்கிய இராச்சியம், அயர்லாந்தில் ஆங்கில மொழியில் வௌியிடப்படுகின்ற நாவல்கள் புக்கர் விருதிற்காக தகுதிபெறுகின்றன.
The Seven Moons of Maali Almeida நாவல் மரணத்திலிருந்து மீண்டு வருகின்ற புகைப்பட கலைஞன் தொடர்பில் எழுதப்பட்டுள்ளதுடன், இது ஷெஹான் கருணாதிலக்கவின் இரண்டாவது நாவலாகும்.
விருது வழங்கலின் போது ஆங்கிலம் மட்டுமல்லாது, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அவர் கருத்து வௌியிட்டார்.
அடுத்த 10 வருடங்களுக்குள் இலங்கையில் ஊழல் மோசடி முறைகேடுகள் தொடர்பிலான புரிதல் ஏற்படும் என்பது எனது ஒரேயொரு எதிர்பார்ப்பாகும். இனவாதம், நண்பர்களுக்கு சாதகமாக ஆட்சி நடத்துகின்றமை ஒருபோதும் சிறந்ததாய் அமையாது என்பதை புரிந்துகொள்வார்கள். வரலாற்றில் பாடம் கற்பதன் மூலம் விரைவில் இது சாத்தியப்படும் என நான் நினைக்கின்றேன். எனது நூலை அரசியல் நூலாக அன்றி, அதற்கு அப்பாற்சென்ற Fantasy நூலாக இலங்கை மக்கள் காண்பார்கள் என நான் நினைக்கின்றேன். இந்த நூல் நாடு தோல்வியடைந்துள்ள தருணத்தில் உங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். அண்மையில் நாம் நமீபியாவிடமும் தோல்வியடைந்தோம். பரவாயில்லை. இன்று இலங்கை மக்கள் அதிகம் துன்பப்படுகின்றனர். அந்த துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கு ஆயுதங்கள் இல்லை. எனினும், அந்த வெற்றியை நாம் ஏற்றுக்கொள்வோம். எப்படியாவது T20 உலகக்கிண்ணத்தை வெற்றிகொள்வோம். ஏன் எம்மால் முடியாது?
என அவர் தெரிவித்தார்.
ஷெஹான் கருணாதிலக்க எழுதிய Chinaman: The Legend of Pradeep Mathew என்ற நாவல் 2008 ஆம் ஆண்டு Gratiaen விருதையும், 2010 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் நூல்களுக்கான விருதையும் 2012 ஆம் ஆண்டு தெற்காசிய இலக்கிய விருதான DSC விருதையும் பெற்றுக்கொண்டது.
இலங்கையில் பிறந்த எழுத்தாளர் ஒருவருக்கு Booker விருது கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பமாக இது வரலாற்றில் பதிவாகின்றது.
2021 ஆம் ஆண்டு Booker விருது வழங்கும் விழாவில் இறுதிச்சுற்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆறு நூல்களில் அனுக் அருள்பிரகாசம் எழுதிய A Passage North நூலும் இடம்பிடித்திருந்தது.
தொடர்ச்சியாக இலங்கை எழுத்தாளர்கள் இருவரின் படைப்புகள் Booker விருது விழாவின் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியுள்ளமை சிறப்பம்சமாகும்.
கருத்துகள் இல்லை